பட்ஜெட் கூட்டத்தொடர்..... எதிர்க்கட்சி எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

 


நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினத்தில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது.

மக்களவையில் நேற்று முன்தினம் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை அழைத்தபோது, அவர் முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனேயின் நினைவுக்குறிப்புகளில் இருந்து, சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட முயன்றார்.

ஆனால் நரவனேயின் அந்த புத்தகம் வெளியிடப்படாத புத்தகம் எனக்கூறி பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் அதனை மேற்கோள் காட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்றும் அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எம்.எம்.நரவனே விவகாரத்தை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அவையில் முறையற்ற செயல்களில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), அம்ரீந்தர் சிங் ராஜா, குர்ஜீத் சிங் அவுஜ்லா, ஹிபி ஈடன், டீன் குரியாகோஸ், பிரசாந்த் படோல், கிரண் குமார் ரெட்டி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் (மதுரை) ஆகிய 8 பேரை பட்ஜெட் கூட்டத்தொடரின் எஞ்சியுள்ள காலம் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்த அறிவிப்பை கேட்டதும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் கோஷம் எழுப்பியபடி சபாநாயகர் இருக்கையை நோக்கி சென்றனர். அப்போதும் காகிதங்கள் கிழித்து வீசப்பட்டன. இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களை நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி சந்தித்து பேசினார். பின்னர், அவர்கள் மகர நுழைவு வாயிலில் அமர்ந்து சிறிது நேரம் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?. அவையின் உறுப்பினர்களுக்குப் பதிலளிக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். மேலும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

8 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமை மீட்டெடுக்கப்படுவதற்காக, அந்த இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் நான் கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments