நாகை மாவட்டம்,திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்சங்கம் சார்பில், ஈஞ்சர் வருவாய் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சர் வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் வே.யாகராஜன் மற்றும் கிராம உதவியாளர் ராஜாமுத்துப்பாண்டி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை 15 நாட்கள் கடந்தும் கைது செய்யாததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஒருங்கிணைந்த முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருக்குவளையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்டத் தலைவர் கா.முரளி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.முத்துக்குமரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அரசு அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்ட செயலாளர் எஸ்.மணிமாறன், வட்ட பொருளாளர் ஜி.ராஜேந்திரன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருக்குவளை வட்ட தலைவர் எம்.விஷ்ணுவர்தன், வட்ட செயலாளர் த.அஸ்வின்குமார், வட்ட பொருளாளர் கே.துர்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.அரசு அலுவலர்கள் பணியில் பாதுகாப்புடன் செயல்பட உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


0 Comments