இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் கடலை பயிர்களுக்கு நிவாரணம், பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடத்தினர்.
கமுதி பேரூராட்சி அருகில் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பேருந்து நிலையம் நோக்கி முழக்கங்களுடன் பேரணியாக சென்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தரைக்குடி முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் நீரின்றி பயிர்கள் கருகி விளைச்சல் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தேசிய வேளாண் காப்பீட்டு நஷ்டஈடு தொகையை பாரபட்சமின்றி பாதிக்கப்பட்ட அனைத்து நெல் மற்றும் கடலை பயிர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர்.
மேலும், நீரின்றி பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவித்து, அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், பன்றி மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளால் விளைநிலங்களில் ஏற்படும் சேதத்திற்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
முல்லை பெரியாறு–வைகை அணையிலிருந்து கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளுக்கு குடிநீர் ஒருபோக விவசாயத்திற்கு தண்ணீர் உத்தரவாதம் வழங்க வேண்டும், காவிரி–கொள்ளிடம் வெள்ள உபரி நீர் திட்டம் மற்றும் காவிரி–வைகை–குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் 2026–2027 பட்ஜெட்டில் ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கி விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் கோரைப்பள்ளம் ராமர், வழக்கறிஞர் வில்லனேந்தல் முத்துமணி, பேரையூர் பாஸ்கரன், செய்யாமங்கலம் பச்சைமால், குண்டுகுளம் வெள்ளை பாண்டியன், மதுரை மண்டல தலைவர் மதுரை வீரன், முல்லைப் பெரியாறு–வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஆதிமூலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

0 Comments