கோவையில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவர்கள் பாதிப்பு..... பள்ளி ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்.....

 


கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு 408 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு காலை மற்றும் மதியம் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. தினமும் 384 மாணவ-மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 31 மாணவர்கள், 13 மாணவிகள் என 44 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட 44 மாணவ-மாணவிகளையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். நேற்று மாலையில் அனைத்து மாணவ-மாணவிகளும் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் சம்பவம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் மற்றும் மாநகராட்சி பள்ளி முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது மாணவ- மாணவிகள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடப்பதை பார்த்தனர். பல்லி விழுந்ததை கவனிக்காமல், உணவை சத்துணவு ஊழியர்கள் பரிமாறியதால், அதை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.மதிய உணவு தயாரிப்பில் அஜாக்கிரதையாக இருந்த ஊழியர்களிடம் மாநகராட்சி பள்ளி முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் அந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் கவுசல்யா, சமையலர் மனோகரி, சமையல் உதவியாளர் ஜெயா கமலம் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று மாநகராட்சியின் வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த ஊழியர்கள் கவுண்டம்பாளையம் பள்ளியில் பணியமர்த்தப்பட்டு சமையல் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments