தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. திருவாடானை உட்கோட்டக் காவல் கண்காணிப்பாளர் (DSP) சீனிவாசன் இந்த அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாகத் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதை உணர்த்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த அணிவகுப்பில் திருவாடானை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, திருவாடானை பகுதிகளில் பதட்டமானவை எனக் கண்டறியப்பட்ட எஸ் பி பட்டினம், பாசிபட்டினம், கலியநகரி உள்ளிட்ட வாக்குச்சாவடி பகுதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் காவல்துறை முழு வீச்சில் தயாராக இருப்பதை இந்த அணிவகுப்பு பறைசாற்றியது.இந்த அதிரடி பாதுகாப்பு நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் தேர்தல் குறித்த பாதுகாப்பு நம்பிக்கை அதிகரித்துள்ளது.


0 Comments