திருக்குவளை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நலமுடன் நமது பள்ளி’ திட்டம் துவக்கம்


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி மரம் அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதி ஏற்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

மாணவர்கள் ஆரோக்கியமாக கல்வி கற்க வேண்டுமெனும் நோக்கில் கல்வி மரம் அறக்கட்டளை சார்பில் இதுவரை மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.



இதன் தொடர்ச்சியாக “நலமுடன் நமது பள்ளி தூய்மை திட்டம்” என்ற பெயரில் பள்ளி கழிப்பறைகளை இயந்திரங்களின் மூலம் சுத்தமாக பராமரிக்கும் புதிய திட்டத்தின் தொடக்க விழா இன்று வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் வ. சுப்பிரமணியன், வட்டார கல்வி அலுவலர் இரா. அன்பழகன், காவல்துறை உதவி ஆய்வாளர் தா. முரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தனர்.

மேலும் கல்வி மரம் அறக்கட்டளை நிறுவனர் செந்தமிழ் பாரதி, மேலாண்மை இயக்குநர் தெ. ஐயப்பன், இயக்குனர்கள் திருநாவுக்கரசு மற்றும் அமர்நாத், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் மு. லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மையின் முக்கியத்துவத்தை விளக்கினர்.

நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த திட்டம் மூலம் பள்ளிகளில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான சூழல் உருவாகி மாணவர்கள் ஆரோக்கியமாக கல்வி கற்கும் சூழல் உருவாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments