தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதன்படி தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் 2026 சட்டசபை தேர்தலில் புதிதாக களம் காண இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட இருக்கிறது. 234 தொகுதிகளுக்கும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அக்கட்சியின் தலைவர் விஜய், வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக, கொடுங்கையூரை அடுத்த கண்ணதாசன் நகரில் விஜய் தங்கியிருந்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பங்களா ஒன்று விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. அந்த பங்களாவில் நாளை (புதன்கிழமை) காலை பூஜை நடத்தப்பட இருக்கிறது. இந்த பூஜையில் பங்கேற்கும் விஜய், பெரம்பூர் தொகுதியில் நாளையே பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறார். 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ளும் அவர், பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க இருக்கிறார்.

0 Comments