புதுக்கோட்டை: நகரச் செயலாளர் பதவிக்கு ரூ.10 லட்சம் பேரம்..... விரக்தியில் கட்சியிலிருந்து விலகிய தவெக நிர்வாகி.....



புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளராக முகமது பர்வேஸ் செயலாற்றி வருகிறார். இவருக்கு அறந்தாங்கி சட்மன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறந்தாங்கி தொகுதியில் முக்கிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல், பெயரளவில் வாய்மொழியாக பதவிகள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நகர் பகுதியில் நகர செயலாளர் உட்பட எந்த பதவியும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தி அலை எழுந்துள்ள நிலையில் கட்சியில் முக்கிய நிர்வாகியான வினோத் என்ற பிச்சை என்பவர் தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் நான் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் தெற்கு மாவட்ட பொருளாளராக செயலாற்றி வந்தேன். 

தவெகவில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் என்று அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தேன், அறந்தாங்கி பகுதியில் கட்சி கூட்டம், நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒருங்கிணைத்ததோடு செலவீனமும் செய்து வந்தேன் ஆனால் இது வரை பொறுப்புகள் வழங்கப்படவில்லை, என்ன என்று கேட்டதற்கு நகர செயலாளர் பதவி வேண்டும் என்றால் 10 லட்சம் பணம் மற்றும் 1 கார் வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். 

எனவே பணம் கொடுத்து ஒரு கட்சியில் பதவியில் வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதி நானே கட்சியிலிருந்து விலகி விட்டேன் என்று தெரிவித்தார். இதே போன்று கடற்கரை பகுதியில் 2 ஆயிரம் பேர் விலகுவதாக சமூக வலைதளங்களில் போஸ்டர் வலம் வருகின்ற நிலையில் தற்போது முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து விலகி இருப்பது தவெகவில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments