அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு அழைப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோன்று நேற்று உதயநிதி ஸ்டாலின் வருகை நிகழ்வுக்கும் முறையாக அழைப்பு கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக வேட்பாளரிடம் காங்கிரஸ் கட்சியினர் கேட்டபோது, அவரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் உரிய மரியாதை அளிக்கவில்லை எனவும் கூறி முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சங்கர் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளரிடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் சங்கர் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாத தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். ஏற்கனவே ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி கேட்கக் கூடாது என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியினரை திமுகவினர் மதிப்பதில்லை. அதேபோன்று வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய அழைப்பு இல்லை. அதே போன்று உதயநிதி ஸ்டாலின் நிகழ்விற்கும் எங்களுக்கு அழைப்பில்லை.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டு வருவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த கட்டமாக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப் போவதாகவும், எங்கள் ஆதரவை மாற்றிக் கொள்ளும் முடிவில் உள்ளோம். இதுகுறித்து தலைமைக் கழகத்தில் தெரிவித்துள்ளோம். இதற்குப் பிறகு அழைப்பு கொடுத்தாலும் உதயநிதி பிரச்சாரத்தில் ஈடுபட போவதில்லை புறக்கணிக்கிறோம் என்றார்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்உள்ளது.

0 Comments