கொச்சி முதல் தூத்துக்குடி வரை கன்னியாகுமரி மாவட்டம் வழியாக இயற்கை எரிவாயு குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு தடையின்றி கியாஸ் கிடைக்கும் எனற தகவல் வெளியாகியுள்ளது.ஈரான்-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலால் ஹார்முஸ் நீர்சந்தி மூடப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோக சங்கிலி அறுந்தது.
இதன் தாக்கம் எங்கோ இருக்கும் நாடுகளை தாண்டி இந்தியாவின் குக்கிராமத்து அடுப்பங்கரை வரை எதிரொலித்தது.சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். வீட்டு தேவையை அரசு பூர்த்தி செய்து விட்டது. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு சிலிண்டரை ரூ.7,000 கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு உணவக உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர். இந்த இக்கட்டான நிலையை புரிந்துகொண்ட மத்திய அரசு, மக்கள் இயற்கை எரிவாயுவுக்கு (பி.என்.ஜி.) மாற வேண்டும் என அறிவுறுத்தியது.
ஆனால் தற்போது நாட்டின் பெருநகரங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. எனவே இதை விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம், இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஒரு முக்கிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதாவது கொச்சியில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தூத்துக்குடி வரை இயற்கை எரிவாயு (மீத்தேன்) குழாய்களை அமைக்கவும், அவற்றை இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கே.டி.பி.எல். (கொச்சி-கன்னியாகுமரி- தூத்துக்குடி குழாய்) என்று அழைக்கப்படுகிறது. இதற்கான ஏலம் முடிந்து, கடந்த மார்ச் 9-ம் தேதி அங்கீகார கடிதம் வழங்கப்பட்டது. மார்ச் 19-ம் தேதி இந்திய ஆயில் கார்ப்பரேஷன் தனது ஏற்பு கடிதத்தை சமர்ப்பித்தது.இந்த திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பானது கொச்சி எல்.என்.ஜி. முனையத்தில் இருந்து தூத்துக்குடி வரை மொத்தம் 424.65 கி.மீ. தூரம் அமைக்கப்படும்.
ஒவ்வொரு பகுதியின் மண் தன்மைக்கு ஏற்ப 16, 14, 12.75 மற்றும் 8.625 அங்குல விட்டம் கொண்ட குழாய்கள் பதிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 68.40 லட்சம் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் எரிவாயு வழங்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் மற்றும் வீடுகளுக்கான கியாஸ் இதன் மூலம் தடையின்றி கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் முதன்மை பொது மேலாளர் யோஹான்குமார் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் சார்பில் செயலாளர் அஞ்சன்குமார்மிஸ்ரா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

0 Comments