கீழ்வேளூர் சட்டபேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடும் வடிவேல் ராவணன் விவசாயியின் மகனாகப் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர். கடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த அவர், இந்த முறை மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற வேண்டும். மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார். இந்த மாற்றம் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு அவசியமானது.
கீழ்வேளூர் தொகுதியில் மூன்று முறை சிபிஎம் எம்எல்ஏ இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. குடிநீர், சாலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இன்றும் இல்லாத நிலை தொடர்கிறது. காவிரி டெல்டா பகுதியில் இருந்தும் குடிநீர் இல்லாமல் மக்கள் போராடுவது வெட்கக்கேடானது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் மீதான குற்றங்களும் அதிகரித்து வருவது கவலைக்குரியது. இந்த நிலையை மாற்ற ஆட்சி மாற்றம் தேவை.
விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நெல் கொள்முதல் முறைகேடுகள், குறைந்த விலை, கடன் சுமை ஆகிய காரணங்களால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வந்தால் நெல் மற்றும் கரும்பிற்கு அதிக விலை வழங்கப்படும்.
மீனவர்கள், நெசவாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னேற்றம் ஏற்படுத்தப்படும். மீனவர் சமூகத்திற்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
எனவே, வரும் 23ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வடிவேல் ராவணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர் சௌ. சித்ரவேல்,அதிமுக எம்ஜிஆர் மன்ற நாகை மாவட்ட செயலாளரும் தேர்தல் பொறுப்பாளருமான எஸ்.பால்ராஜ், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாகை செய்தியாளர் எல்.கலைச் செல்வம்



0 Comments