வழக்கறிஞரான பேரறிவாளன்..... பார் கவுன்சில் சொல்வது என்ன.?

 


பேரறிவாளனின் ஆவணங்கள் பார் கவுன்சிலின் வழக்கறிஞர் பதிவுக் குழுவால் முறையாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது என பார் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தண்டனை பெற்றனர். சுமார் 31 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த 2022ஆம் ஆண்டு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் பெங்களூருவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள் சட்டப் படிப்பை முடித்தார். அதன் பின்னர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.

பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்பியும் வழக்கறிஞருமான ஆர். சுதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு புகார் மனு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.இந்நிலையில், பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என பார் கவுன்சில் உறுப்பினரும், வழக்குரைஞர் பதிவுக் குழு தலைவருமான கே. பாலு விளக்கம் அளித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறுகையில், “சட்டப்படி, ஒருவர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அந்தத் தண்டனையை முழுமையாக அனுபவித்து, அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து வழக்கறிஞராகப் பதிவு செய்யலாம். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர் வழக்கறிஞராகப் பதிவு செய்வது இது முதல் முறையல்ல. பேரறிவாளனின் ஆவணங்கள் பார் கவுன்சிலின் வழக்கறிஞர் பதிவுக் குழுவால் முறையாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments