தென்காசி, நெல்லையில் சரமாரி அரிவாள் வெட்டு..... 8 பேர் படுகாயம் - 7 பேர் கைது



 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வாலிபருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 11 மணியளவில் மணமகனின் வீட்டின் அருகில் சில வாலிபர்கள் பேனர் அமைத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது மதுபோதையில் ஒரு வாலிபர் வந்தார். அவர் பேனர் அமைத்துக் கொண்டிருந்தவர்களிடம் திடீரென தகராறு செய்தார். உடனே அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஊர் பெரியவர்கள் சேர்ந்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். நேற்று திருமண விழா நடந்த நிலையில் மாலை நேரத்தில் மணமகன் வீட்டின் அருகில் மேளதாளத்துடன் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது முகமூடி அணிந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல் அரிவாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் அந்த வழியாக வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திருமண வீட்டின் அருகே கூடியிருந்த கும்பலுக்குள் புகுந்தனர். கத்தி கூச்சலிட்டபடியே தாங்கள் கொண்டு வந்த அரிவாள்களை எடுத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரி வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.இருப்பினும் இந்த அரிவாள் வெட்டில் நேட்டூரை சேர்ந்த ஞானமுத்து மகன் ரமேஷ் (வயது 49), அவரது மகன் அருள் மாறன் (23), கணேசன் மகன் சந்தோஷ்குமார் (21), கபிரி யேல் மகன் ராயப்பன் (18), ஆய்க்குடி அருகே ஆனந்தபு ரத்தை சேர்ந்த சேகர் மகன் ராம்குமார் (20) மற்றும் திரும ணத்திற்கு மேளம் அடிக்க வந்த சாம்பவர்வடகரையை சேர்ந்த பரமசிவன் மகன் மாடசாமி (19) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களில் ராயப்பன், அருண்மாறன், ரமேஷ், ராம்குமார் ஆகிய 4 பேரும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் போலீசார், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றினர். அதில் பதிவாகியுள்ள உருவங்களின் அடிப்படையில் அரிவாள் வெட்டில் ஈடுபட்ட 9 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். ஆலங்குளம் அருகே திருமண விழாவில் புகுந்து 6 பேரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நெல்லை அருகே மானூரை அடுத்த தெற்குப்பட்டி கிராமத்தில் நேற்று மாலையில் சுமார் 3 மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் அதிவேகமாக கையில் அரிவாளுடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சிலர், ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்று கேட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த கும்பல் தெற்குப்பட்டியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 35), முபாரக் (30) ஆகியோரை அரிவாளின் பின் பகுதியால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்தவர்கள் இருவரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளின் அடிப்படையில் 4 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் நெட்டூரில் ஒரு கும்பல் 6 பேரை வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். எனவே இவர்கள் அந்த கும்பலை சேர்ந்தவர்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments