தேனியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

      


 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக,  தயார் நிலையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் பொதுப்பார்வையாளர்கள் பீம் சிங்,  வினய் பிரதாப் சிங்,  ஜெகன்நாத் மகாதேவ் விர்கர் மற்றும் கஹ்னு சரண் திர்  ஆகியோர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு  23.04.2026 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள 198.ஆண்டிபட்டி, 199.பெரியகுளம், 200.போடிநாயக்கனூர், 201.கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு, நாளை (04.05.2026) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் அம்மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



அதனடிப்படையில், இன்றைய தினம் கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில்  தபால்வாக்கு எண்ணும் அறைகள்,  மின்னணு வாக்கு எண்ணுவதற்கான அறைகள்,  கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் தேர்தல் பணியாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் செல்லுவதற்கான வழித்தடங்கள் என இந்திய தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா எனவும்,  

மேலும், மூன்றடுக்கு காவல் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதையும்,  எல்இடி திரை மூலம் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டை வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிடுவதையும்,  காவல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகள்  முறையாக அமைக்கப்பட்டு வாக்கு எண்ணுவதற்கான பணிகள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

 


இவ்வாய்வில், மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர்  / மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், தேர்தல் நடத்தும் அலுவலர் /பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன்,  தேர்தல் நடத்தும் அலுவலர் /தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி.)   கவிதா, தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, தேர்தல் நடத்தும் அலுவலர் / உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையத் முகைதீன் இப்ராஹிம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) காசி, உதவி இயக்குநர்  (நில அளவை) அப்பாஸ், செயற்பொறியாளர் பிரபு,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், உதவி செயற்பொறியாளர்கள் சண்முகவேல், சரவணக்குமார், வட்டாட்சியர்கள் சுருளி(தேர்தல்),  சதீஸ்குமார் (தேனி), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் / வட்டாட்சியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments