ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வலையபூக்குளத்தில் அருள்மிகு ஸ்ரீ பெரிய முத்தம்மன், அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில்கள் வைகாசி பொங்கல் திருவிழா 20-5-2026 கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இத்திருக்கோவில் திருவிழாவானது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
இதனை முன்னிட்டு 20-5-26 காலை 11:00 மணிக்கு மேல் வேத மந்திரங்கள் முழங்க, கோவில் கொடி மரத்தில் கொடிபட்டம் ஏற்றப்பட்டு, அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு திருவிழா முறைப்படி தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தினசரி பூஜைகள் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகள்:
20-5-26 தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் இரவு 8:00 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகளுடன் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன.
திருவிழாவின் முக்கிய நாட்களான அடுத்த வார நிகழ்வுகளின் விவரம் பின்வருமாறு:
மே 25 (திங்கட்கிழமை): அம்மன் பூ கரகம் எடுத்தல் மே 26 (செவ்வாய்க்கிழமை): பெருந்திருவிழாவான வைகாசி பொங்கல் திருவிழா மே 27 (புதன்கிழமை): பக்தர்களின் நேர்த்திக்கடனான அக்னிசட்டி திருவிழா மற்றும் பூக்குளி (தீமிதி) திருவிழா மே 28 (வியாழக்கிழமை): பால்குட ஊர்வலம் மற்றும் மங்களகரமான திருவிளக்கு பூஜை மே 30 (சனிக்கிழமை): விழாவின் நிறைவாக முளைப்பாரி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வலையப்பூகுளம் நாடார் உறவின்முறையினரும் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர். திருவிழா நாட்களை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments