திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

 


ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

​விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே கோவிலில் சிறப்புப் பூஜைகள் தொடங்கின. முன்னதாக அனுஞை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.


​பின்னர் சுவாமி, அம்பாளுடன் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருள, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவில் கொடிமரத்தில் முறைப்படி கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்குத் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில் திருவாடானை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள், சிவபக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

​திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று மாலை இந்திர விமானத்தில் ஐம்பெரும் கடவுளர்களின் திருவீதி உலா நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

​விழாவின் சிகர நிகழ்ச்சியான புகழ்பெற்ற தேரோட்டம் வருகிற மே 29ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. அன்று இரவு சிறப்பு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments