ஹாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச யோகாசன போட்டியில், தமிழகத்தை சேர்ந்த, மாணவர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தனர்.
ஹாங்காங் நாட்டில், ஹாங்காங் யோகாசன விளையாட்டு சம்மேளனம் சார்பில் சர்வதேச யோகாசன போட்டிகள், இம்மாதம், 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, சவுதி அரபியா, சீனா, தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட, 16 நாடுகளை சேர்ந்த, 450 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் பங்கேற்ற அணியில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த, 15 மாணவர்கள், யோகா பயிற்சியாளர் சந்தியா தலைமையில் இடம் பெற்றிருந்தனர்.
வயது வாரியாக, பல்வேறு பிரிவுகளில் யோகாசன போட்டிகள் நடந்தப்பட்டன. இந்த போட்டியில், 25 தங்கம், 17 வெள்ளி பதக்கங்களுடன், இந்திய அணி, பதக்கப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. அவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த மேற்கண்ட, 15 மாணவர்களும், 12 தங்கம், 8 வெள்ளி பதக்கங்களை கைப்பற்றினர்.
பதக்கங்களுடன் நாடு திரும்பிய மாணவர்களுக்கு, கும்மிடிப்பூண்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பகுதி மக்கள் சார்பில், சாதனை படைத்த மாணவர்களுக்கு மாலைகள் மற்றும் சால்வைகள் அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி வழியாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.


0 Comments