நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்றது. வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் க. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருக்குவளை வட்டாட்சியர் இரா. உதயக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் வீ.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இந்த ஜமாபந்தி கூட்டத்தில் வலிவலம், காருகுடி, கொடியாலத்தூர், தென்மருதூர், ஆதமங்கலம், பாங்கல், பனங்காடி, கொளப்பாடு, வடக்குப்பனையூர், தெற்குப்பனையூர், அனக்குடி உள்ளிட்ட 11 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குறிப்பாக, இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை பெறுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 110 மனுக்கள் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டன.
மக்களின் கோரிக்கைகளை கவனமாக ஆய்வு செய்த அதிகாரிகள், உடனடி நடவடிக்கையாக 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும், மீதமுள்ள மனுக்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி விரைவாக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டாச்சியர் வெற்றிச்செல்வன், வருவாய் ஆய்வாளர் தினேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் ஜமாபந்தி நிகழ்வுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்





0 Comments