ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைடன்ஸ் அணி தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நட்சத்திர வீரர் விராட் கோலி அதிரடியாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 75 ரன்கள் அடித்த கோலி, கடைசி வரை களத்தில் நின்றார்.பரிசளிப்புவிழா முடிந்தததும், தோல்வி அடைந்த சோகத்தில் குஜராத் அணி வீரர்கள் தங்களுக்கான பேருந்தில், ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் தீ விப்த்து எற்பட்டது. எனினும், அனைத்து வீரர்களும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் சாலையோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையைத் தவறவிட்ட சோகத்தில் இருந்த குஜராத் வீரர்களுக்கு, இந்தச் சம்பவம் மேலும் அதிர்ச்சியை அளித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளரான முகமது சிராஜ் தனது சமூக வலைதள பதிவில் குஜராத் டைட்டன்ஸ் வீரர்களுடன் சாலையில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சோகத்தை வெளிப்படுத்தி இருந்தார். மின்கசிவால் பேருந்தில் தீ பிடித்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் அணி வீரர்கள் சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

0 Comments