சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இன்று காலை பிரம்மாண்ட மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ்’ (Start Run, Stop Drugs) என்ற பெயரில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தானை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார்.
நிகழ்வின் தொடக்கமாக, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை தமிழக முதலமைச்சர் விஜய் வாசிக்க, அங்கு திரண்டிருந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அதைத் திரும்பக் கூறி உறுதி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, அங்கிருந்த விழிப்புணர்வுப் பலகையில் போதைப்பொருளுக்கு எதிரான தனது முதல் கையெழுத்தைப் போட்டு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதில் Sports – ah – edu -Drugs – ah – Vidu என எழுதி கையெழுத்திட்டார்.இதனைத் தொடர்ந்து, மாரத்தான் ஓட்டத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், விழிப்புணர்வை முன்னெடுக்கும் வகையில் முதல் ஆளாகக் களமிறங்கி மக்களோடு மக்களாக இணைந்து ஓடினார்.
இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், மரியா வில்சன், வெங்கட்ரமணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

0 Comments