நாகை: நாட்டாமை திரைப்படபாணியில் மீனவ குடும்பத்தை ஒதுக்கிவைத்த கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள்..... மனுக்களை மாலையாக அணிந்து ஆட்சியர் அலுவலகம் வந்த தம்பதி.....



நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காமராஜ் - விஜயசாந்தி தம்பதியினர். மீன்பிடித் தொழில் செய்து 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு சொந்தமான 70 குழி நிலத்தை பஞ்சாயத்தார்கள் ஊரின் பயன்பாட்டிற்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஊருக்கு தருவதற்கு தர மறுப்பு தெரிவித்ததால்,  கடந்த 8 ஆண்டுகளாகத் தங்கள் குடும்பத்தை தொழில் செய்ய விடாமல் ஊர் விலக்கம் செய்துள்ளதாகத் புகார் தெரிவித்துள்ளனர். 



கடந்த பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான புகார்களை கொடுத்தும் எந்தவிதமான அதிகாரிகளும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், நூற்றுக்கணக்கான மனுக்களை நீண்ட தோரணம் போல் கட்டியும், கழுத்தில் மாலையாக போட்டும் நூதன முறையில் மனு அளிக்க வந்தனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள் மனுக்களை கழுத்தில் மாட்டிக்கொண்டு, முட்டிபோட்டு மாவட்ட ஆட்சியரை சந்திதிக்க உள்ளே வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 



பலமுறை புகார் அளித்தும், உள்ளூர் காவல்துறையும், வருவாய்த்துறையும் பஞ்சாயத்தாருக்கு உடந்தையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள விஜயசாந்தி, கடந்த 8 ஆண்டுகளில் இது தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் தங்களுக்கு இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். குடும்பத்தை வதைக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடனடியாக ஊர் கட்டுப்பாட்டை நீக்கி, நிலத்தை அளந்து தங்களுக்குத் தனிப்பட்டா வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  பாதிக்கப்பட்ட தம்பதியினர் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். நூற்றுக்கணக்கான மனுக்களை மாலையாக கட்டி தம்பதியினர் மனு அளிக்க வந்த சம்பவம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.



 நாகை மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments