விலைவாசி உயர்வு மற்றும் தொழிலாளர் சட்ட தொகுப்பு அமலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கீழையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம்



நாகை மாவட்டம் கீழையூரில் விலைவாசி உயர்வு, தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலாக்கம் மற்றும் 100 நாள் வேலைத் திட்ட திருத்தத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழையூர் கடைத்தெரு பகுதியில் இருந்து துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று தபால் நிலையம் முன்பாக நிறைவடைந்தது. பின்னர் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர்  வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்துல் அஜீஸ்  முன்னிலை வகித்தார்.



விவசாய சங்க மாநில துணைத்தலைவர் வீ. சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம். முருகையன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் என். பன்னீர்செல்வம்  ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும், 100 நாள் வேலைத் திட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலியை 700 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.



இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கீழையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும்  மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கே. கிருஷ்ணன், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஏ. முருகையன், பி. ராமலிங்கம், மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் கே.டி.எம்.சுஜாதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments