திருக்குவளை அருகே ஓலை குடிசையில் வளர்ந்து உலக செஸ் மேடைக்கு ஏங்கி வரும் செஸ் சாம்பியன் சபரிநாதன்



நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி அருகே இராமச்சந்திரபுரம் கிராமத்தில்  வறுமையை மீறி, தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்து வரும் ஒரு மாணவனின் உணர்ச்சிகரமான பயணம் இது. திறமை இருந்தும் ஆதரவு இல்லாமல் போராடும் இந்த மாணவனுக்கு அரசு உதவி கிடைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எளிமையான சூழலில், ஒழுகும் ஓலை குடிசை  வீட்டில் வசித்து வரும் ஒரு குடும்பம்.அந்த வீட்டில் தான் வசிக்கிறார் செஸ் உலகில் முன்னேறி வரும் மாணவன் சபரிநாதன்.தந்தை ஐயப்பன்  தினசரி கூலி தொழிலாளி.தாய் மேனகா  குடும்பத்தை நடத்த போராடும் பெண்.இந்த சாதாரண குடும்பத்தில் பிறந்த சபரிநாதன், இவர் சாட்டியக்குடி பகுதியில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஒன்றாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கினார்.



தம்பி சரணுடன் சேர்ந்து ஆரம்பித்த இந்த பயணம், நாளடைவில் அவரை ஒரு திறமையான வீரராக மாற்றியது.அவரது திறமை முதன்முதலாக வெளிப்பட்டது, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றார்.அதன் பிறகு அவர் பின்னோக்கி பார்க்கவில்லை.அரசு மற்றும் தனியார் சார்பில் நடைபெறும் அனைத்து சதுரங்கப் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளை குவித்து வந்தார்.

குறிப்பாக கடந்த ஆண்டு அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு 46வது இடம் பிடித்து தனது திறமையை உலக அரங்கில் நிரூபித்தார்.திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று ரேட்டிங் புள்ளிகளையும் பெற்று முன்னேறி வருகிறார்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட கோப்பைகள்.50க்கும் மேற்பட்ட பதக்கங்கள்.இளம் வயதிலேயே “சதுரங்க நாயகன்” என அழைக்கப்படும் நிலையை அடைந்துள்ளார்.ஆனால்,

இந்த சாதனைகளின் பின்னால் ஒரு கசப்பான உண்மை உள்ளது.ஒழுகும் கூரை வீடு.பொருளாதார சிரமம்.அடிப்படை வசதிகளே இல்லாத வாழ்க்கை.செஸ் பயிற்சிக்குத் தேவையான டைமர் மற்றும் லேப்டாப் வாங்க முடியாத நிலை.பெற்றோரிடம் கேட்கும் மனம் இருந்தாலும், குடும்ப சூழ்நிலையை நினைத்து அமைதியாக இருப்பது.தினமும் கூலி வேலைக்கு செல்லும் தந்தையை சிரமப்படுத்த விரும்பாத மனம்.இவையே சபரிநாதனின் உண்மை நிலை.

“எனக்கு இன்னும் நிறைய போட்டிகளில் வெல்லணும்… நாட்டுக்கு பெயர் வாங்கணும்…”

திறமை இருந்தும், ஆதரவு இல்லாமல் திணறும் இந்த மாணவனுக்கு அரசு உதவி கிடைத்தால், இன்னும் பல உயரங்களை அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை.வறுமையை வென்று உலக மேடையில் சாதனை படைக்கும் இந்த மாணவனை அரசு கவனித்து, தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.சபரிநாதன் போன்ற திறமையாளர்களை  ஊக்குவிக்கப்படும்போது தான், நம் மாநிலம் விளையாட்டு துறையில் மேலும் உயரம் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments