புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இளம் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கான சிறப்பு மற்றும் பொதுக்கலந்தாய்வு , ஜூன் 6 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும். கல்லூரியில் ஜூன் 6 ஆம் தேதி சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு நடைபெறும்.
தொடர்ந்து பிஎஸ்ஸி., கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் கணிதவியல் ஆகிய அறிவியல் பாடங்களுக்கான பொதுக்கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி புதன்கிழமையும், பிஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பிகாம்., வணிகவியல், பிபிஏ., நிருவாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான பொதுக்கலந்தாய்வு ஜூன் 11 ஆம் தேதி வியாழக்கிழமையும் நடைபெறும். மேற்குறிப்பிட்ட கலந்தாய்வுகள் அனைத்தும் குறிப்பிட்டுள்ள தேதிகளில் காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெறும். இக்கலந்தாய்வில் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவரவர்களுக்கு உரிய அலைபேசி எண்களுக்கு, கல்லூரி கல்வித்துறை தர வரிசைப்பட்டியலின்படி விரைவில் குறுஞ்செய்தியும் அனுப்பப்பெறும். அவ்வாறு குறுஞ்செய்தி வரப்பெற்ற மாணவ, மாணவியர் தவறாமல் பங்கேற்க வேண்டும். மேலும் கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் தங்களின் இணைய தள விண்ணப்பப் படிவத்துடன், தங்களின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், ஆதார் அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ், இனச்சான்று, வருமானச்சான்று, புகைப்படங்கள்-5, வங்கிக்கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களின் அசல்கள் மற்றும் 5 நகல்களையும் எடுத்து வரவேண்டும் என கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் அறிவித்துள்ளார்.

0 Comments