தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் அலட்சியம்..... சாக்கடை வாய்க்காலில் குடிநீர் குழாய் அமைத்துள்ளதால் பொதுமக்கள் அவதி.....

 


ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலைப் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பிரதான குழாய் வால்வு (கேட் வால்வு) அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே திருவாடானை ஊராட்சியின் கழிவுநீர் வடிகால் வாய்க்காலும் (சாக்கடை) செல்கிறது.​இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான குடிநீர்க் குழாய் ஒன்றை, அந்தச் சாக்கடை கால்வாயின் மீது அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி முற்றிலும் சுகாதாரக்கேடாக மாறியுள்ளதுடன், மாசடைந்த அந்தப் பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்துப் பயன்படுத்த முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.



​மேலும், அந்த குடிநீர்க் குழாயின் அடிப்பகுதியில் தற்போது உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் பெருமளவில் வீணாகி வருகிறது. குழாயில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் போது, சாக்கடை நீர் உறிஞ்சப்பட்டு மீண்டும் குழாய்க்குள்ளேயே செல்லும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான சுகாதாரக்கேடும், தொற்றுநோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.



​குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நாள்தோறும் இந்த வால்வைத் திறப்பதற்காக இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இருப்பினும், இந்த அவல நிலையைக் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்து இக்குறைபாட்டைச் சரி செய்ய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments