இராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியில் கேணிக்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். செல்லபெருமாள் பிள்ளை தெருவில் சென்ற போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரின் டூவீலரை போலீசார் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் மீன்காரத் தெருவை சேர்ந்த அல் ஆதிம் 22, என்றும், அப்பகுதியில் அவரது உறவினர் அம்ஜத் புகையிலை பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
உடனே போலீசார் அந்த பகுதியில் உள்ள வீட்டின் அறையை சோதனை செய்தனர். அதில் தலா 15 கிலோ எடையுள்ள 3 மூடைகளில் 1368 புகையிலை பொருட்கள் இருந்தன. புகையிலையை பறிமுதல் செய்து கைது செய்த போலீசார் அல் ஆதிம்மிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அம்ஜத்தை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அம்ஜத் பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து வந்துள்ளார். அவ்வாறு வரும் புகையிலையை அல் ஆதிம் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த முகமது அலி ஜின்னா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரது வீட்டிலிருந்து சுமார் 486 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோர், பதுக்கி வைப்போர் மற்றும் சட்டவிரோதமாக விநியோகம் செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 Comments