ராமநாதபுரம்: வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூட்டுறவு வார விழா கொண்டாட்டம்



ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கூட்டுறவு வாரம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  கமுதி - கண்ணார்பட்டியில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒன்றிய அரசின் கூட்டுறவு அமைச்சகம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடந்த ஜூன் 29 -ம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் கூட்டுறவு வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கமுதி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராமநாதபுரம் மண்டல இணைப்பதிவாளர் சீனு அறிவுறுத்தலின்படி, சரக துணைப்பதிவாளர் பரமக்குடி ரத்தினவேலு தலைமையில், சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் வேல்முருகன் முன்னிலையில் விவசாயிகள், சங்க உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில் பொது மக்களிடையே கூட்டுறவு இயக்கத்தின் முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்கும் வகையிலும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கூட்டுறவு சங்கங்களில் புகுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்களை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதில் கமுதியை சுற்றியுள்ள 100 க்கும் மேற்பட்ட விவசாய பிரதிநிதிகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொது மேலாளர் போஸ் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments