திருப்பத்தூர் அருகே பாரம்பரியமிக்க விரட்டு மஞ்சுவிரட்டு! பங்கேற்ற அனைத்து கோவில் காளைகளுக்கும் துண்டுகள் வழங்கி கௌரவிப்பு



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் நாடு மேலத்தெரு சேகரம் காளியாத்தாள் ஆடிப்படைப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏழு தலைமுறைகளாக இக்கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் ஆடிப்படைப்பு விழாவை முன்னிட்டு மாபெரும் பாரம்பரியமிக்க விரட்டும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கமாகும்.

 அப்படி இந்த ஆண்டு விழா குழுவினர் கோவிலில் இருந்து வானவேடிக்கையுடன் மஞ்சுவிரட்டு திடலுக்கு புறப்பட்டு சென்று சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து வருகை தந்த 300-க்கும் மேற்பட்ட கோவில் காளைகளுக்கு ஆண்டியப்பன் அம்பலம் வகையறா காக்காச்சி வம்ச உறவுகளால் துண்டுகள் அணிவிக்கப்பட்டும், கிராம பெரியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது.



 தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி தற்சமயம் மஞ்சுவிரட்டு தொழுவத்தில் காளைகளை விரட்ட அனுமதி இல்லை என்பதால் புதுக்கோட்டை காரைக்குடி பொன்னமராவதி திருப்பத்தூர் சிங்கம்புணரி சிவகங்கை மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 500க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் கட்டுமாடுகளாக வயல் வெளிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

 கட்டுமாடுகள் என்பதால் இப் போட்டியினை காண வந்த ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் உற்சாகத்தோடு காளைகளை அடக்கி மகிழ்ந்தனர். இவ்விழாவிற்கான தலைமை ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் ஏற்பாடுகளை தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவை கௌரவத் தலைவர் இராஜாமணி இராமச்சந்திரன் மற்றும் விழாக்கமிட்டி பங்காளிகள் ஆகியோர் செய்து இருந்தனர். இவ்விழாவை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என திரளானோர் வருகை புரிந்தனர். தொடர்ந்து கோவில் விழா குழு சார்பில் அனைவருக்கும் படையல் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments