2 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து திருப்பூண்டியில் சாலை மறியல்..... மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்



நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பூண்டி ஊராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி, அனைத்து பகுதி மக்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

19.08.2026 காலை 10 மணியளவில் திருப்பூண்டி ECR சாலையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி நாகை மாவட்டத் தலைவர் O.S. இப்ராஹிம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



திருப்பூண்டி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தொலைதூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.



போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் N. சர்புதீன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் அமீர் அப்பாஸ், ஒன்றிய செயலாளர்கள் ஹாஜா அலாவுதீன், அப்துல் கபார், ஷாகுல் ஹமீது, கிளைத்தலைவர் அகமது கபீர், செயலாளர்கள் ஷேக் நவாஸ், ரசுலான், நீலமேகம், ஜெயப்பிரகாஷ் மற்றும் மகளிரணி செயலாளர் மதினா பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



சாலை மறியலால் நாகை–தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கீழையூர் காவல்துறையினர் மற்றும் கீழ்வேளூர் வட்டாட்சியர் வேதையன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த கட்டமாக காலி குடங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments