திருக்குவளை அருகே இருதய கமலநாத சுவாமி திருக்கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிளக்கு பூஜை



 நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா  வலிவலத்தில் அமைந்துள்ள மாழையொண் கண்ணி உடனுறை மனத்துணைநாதர் திருக்கோயில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 திரு விளக்கு பூஜை நடைபெற்றது.பழமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க இத்திருக்கோயில், சோழர் கால கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.



கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட பழமையான மாடக்கோயிலாக விளங்கும் இத்தலத்தில், மனத்துணைநாதர் சுவாமி ஸ்ரீ இருதய கமலநாத சுவாமி எனவும் அழைக்கப்படுகிறார். இருதய நோய்கள் தீருவதற்கான பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் பக்தர்களால் போற்றப்படுகிறது.

பல்வேறு சிறப்பு மிக்க இக்கோயிலில் , ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு  சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்  திருவிளக்கு பூஜையில் 108 இளம்பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கை அம்பாளாக பாவித்து வழிபாடு செய்தனர். பெண்கள் குத்துவிளக்குகளுக்கு குங்குமம் வைத்து, மலர்கள் தூவி சிறப்பு அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.



தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு மகா தீபம் காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு திருவிளக்கு பூஜையில் வலிவலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments