தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் சில்வார்பட்டி வருவாய்க் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் சொசைட்டி காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பட்டியலின (அருந்ததியர் ) மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சர்வே எண் 473 க்கு தெற்கு பகுதியில் 30 சென்ட் நிலம் அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது. இந்த அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டியலின (அருந்ததியர் ) மக்களுக்கான பொதுக்கழிப்பறை, சமுதாய நலக்கூடம், இலவச வீட்டு மனை பட்டா பெறுதல் உள்ளிட்ட சமூக நலத்திட்டத்திற்காக இந்த அரசு புறம்போக்கு நிலத்தை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த நிலத்திற்கு, கிழக்குப்புறமாக தனியார் தரிசு நிலம் அமைந்துள்ளது. அந்த நிலத்தை பிளாட்டாக மாற்றுவதற்கு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை பாதையாக மாற்றுவதற்கு ஆதிக்க சாதியினர் பல்வேறு அத்துமீறல்கள் மற்றும் உரிமை மீறல்களில் செயல்பட்டு பட்டியலின மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். அன்றாடமும் ஒன்று இரண்டு பேர் வந்து , இந்த இடத்தை பார்வையிடுவதும் பட்டியலின மக்களை தகாத வார்த்தைகளில் பேசி அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது. இது குறித்து, புகார் தெரிவிப்பதற்கு கூட தைரியம் இல்லாமல் கூனிக் குறுகி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று அரசு சர்வேயர் ஆறுமுகம் என்பவர் பொது மக்களுக்கு எந்த வித தகவலும் தெரிவிக்காமல், சட்ட ஒழுங்கை பாதித்து, ஜாதி கலவரத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ள சூழ்நிலையிலும் கையூட்டு பெற்றுக் கொண்டு பட்டியலின மக்களுக்கு நலத்திட்டங்களுக்கு சேர வேண்டிய நிலத்தை தனியாரின் லாப நோக்கத்திற்காக பாதையாக வழங்குவதற்காக நில அளவை செய்து முடித்துள்ளார். ஆனால், நில அளவை குறித்த அறிக்கையினை இதுவரை எந்த அலுவலகத்திலும் சமர்ப்பிக்கவில்லை. இது குறித்து அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் நில அளவை அறிக்கையினை வழங்கும் படி சர்வேயரிடம் கேட்டபோது, 10 நாட்களுக்கும் மேலாக அலைக்கழித்து வருகிறார்.
பட்டியலின மக்களை வஞ்சித்து, தனியாருக்காக ஒருதலைப் பட்சமாக செயல்படும் நில அளவையர், சில்வார்பட்டி கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் முத்துமணி, தேவதானப்பட்டி வருவாய் ஆய்வாளர் முத்துராமன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பட்டியலின மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments