கமுதியில் ரேஷன் கடை மிஷின்களில் சர்வர் கோளாறு.... வட்ட வழங்கல் அலுவலரிடம் மிஷின்களை ஒப்படைத்த ரேஷன் கடை ஊழியர்கள்

  


ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.கமுதி வட்டாரத்தில் உள்ள  60 ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அரசு சார்பில் தமிழ்நாடு  பொது விநியோக திட்டத்தின் கீழ், அனைத்து ரேஷன் கடைகளிலும்  பயனாளர்கள் கைரேகை பதிவு செய்து ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அரசு சார்பில் வழங்கப்பட்ட அதிநவீன ரேஷன் விநியோக திட்ட மிஷின் சர்வர் பிரச்சனை காரணமாக, பயனாளிகளுக்கு முறையாக ரேஷன் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி, கமுதி வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் சார்பில் கமுதி வட்ட தலைவர் மாணிக்க வேல், செயலாளர் சந்தன மாரி, பொருளாளர் துரைமுருகன் , மாவட்ட செயற்குழு மாரிமுத்து உட்பட 60 ஊழியர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட அந்த மிஷின்களை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வட்ட வழங்கல் அலுவலர் வேலவனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட வட்ட வழங்கல் அலுவலர் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள சர்வர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.இதையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் புகார் மனுவை மட்டும் அளித்து இயந்திரத்தை திரும்ப கொண்டு சென்றனர்.

Post a Comment

0 Comments