நாகை மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்ற இப்பணியில் கோயில் பணியாளர்கள் பங்கேற்று கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.
முருகப்பெருமானின் ஆதிபடை வீடாகவும், சத்ரு சம்ஹார ஸ்தலமாகவும் போற்றப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முக்கிய முருகன் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
இக்கோயிலுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளிலும், மாதந்தோறும் நடைபெறும் கார்த்திகை தினங்களிலும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இதனை முன்னிட்டு கோயில் வளாகத்தின் தூய்மை மற்றும் பராமரிப்பை மேம்படுத்தும் வகையில், கோயில் பணியாளர்கள் சார்பில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கோயில் வளாகம், சுற்றுப்புறப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பக்தர்கள் அதிகளவில் வந்து செல்லும் பிரசித்தி பெற்ற திருத்தலத்தில் தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


0 Comments