வீ தி லீடர் அமைப்பின் சார்பில், கீழ்வேளூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட திருக்குவளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வீ தி லீடர் அமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாதமும் சமூக நலன் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மறைந்த நடிகரும் சமூக ஆர்வலருமான கலைவாணர் விவேக் நினைவாக மாநிலம் முழுவதும் சுமார் 20 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வீதி லீடர் அமைப்பின் தலைமை சேவகர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதனையொட்டி, கீழ்வேளூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட திருக்குவளை பேருந்து நிலையம் அருகே மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்குவளை தன்னார்வலர் ஆறு. திருமால்வளவன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பிரதாபராமபுரம் முன்னாள் ஊராட்சி தலைவரும், நாகை மாவட்ட தலைமை சேவகருமான ஆர்.வி.எஸ். சிவராசு மற்றும் வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளர் இராம. வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், மரங்களின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நாகை சட்டப்பேரவை தொகுதி தன்னார்வலர்கள் ப. குணாலன், மணிகண்ட பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வீதி லீடர் அமைப்பைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.மரக்கன்றுகளை வழங்குவதுடன் மட்டுமின்றி, அவற்றை முறையாக நட்டு பராமரித்து வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்






0 Comments