ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் பீட்டர்புரத்தில், குடும்பத் தகராறில் மாமியார் வாசுகி (48) என்பவரை அவரது மருமகன் உதயகுமார் (22) கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது .
பேரையூர் பகுதியை சேர்ந்த உதயகுமார், வாசுகியின் மகள் ஹேமலதாவை (19) நான்கு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். குடும்பப் பிரச்னை காரணமாக இருவரும் சில நாட்களாக ஹேமலதாவின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. உதயகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது மதுவை அருந்திவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதை வாசுகி கண்டித்துள்ளார் .
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த உதயகுமார், வாசுகியின் தலையில் கோடாரியால் வெட்டியதாகவும், இதில் அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் உதயகுமாரும் ஹேமலதாவும் தூங்கச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மறுநாள் காலை வாசுகி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, அவர் இயற்கை மரணம் அடைந்தது போல் காட்டுவதற்காக இருவரும் முயன்றதாக கூறப்படுகிறது. வாசுகியின் மூத்த மகள் ஹேமா தகவல் கிடைத்து வந்து பார்த்தபோது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது இதனையடுத்து பேரையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் கொலை நடந்தது தெரியவந்ததை தொடர்ந்து உதயகுமார் மற்றும் கொலையை மறைக்க முயன்றதாக கூறப்படும் ஹேமலதா ஆகிய இருவரையும் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

0 Comments