நாகப்பட்டினம் மாவட்டம்,திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சி முடிகொண்டான் ஆற்றின் கரையோரம் 3 தலைமுறைகளாக சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என லட்சிய ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் விஜயராகவன் தலைமையில், அப்பகுதி மக்கள் ஒன்று சேர்த்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் இன்று மனு அளித்தனர்.
அந்த மனுவில், ஆதலையூர் ஊராட்சிக்குட்பட்ட முடிகொண்டான் ஆற்றின் கரையோரப் பகுதியில் 3 தலைமுறைகளாக 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும், நீண்ட காலமாக அப்பகுதியில் குடியிருந்து வரும் தங்களுக்கு இதுவரை முறையான வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் வசித்து வரும் தங்களின் குடியிருப்புகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் வகையில், தகுதியுள்ள குடும்பங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பட்டா இல்லாததால் அரசு சார்பில் வழங்கப்படும் வீடுகளை கட்ட முடியாமல் கூரை வீட்டிலே வசிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.ஆகவே தங்களது நீண்டகால கோரிக்கையை அரசு பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுத்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கைகளை விளக்கி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


0 Comments