திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் ,சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலிலும் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்லாத வகையில், கோவில் வளாகத்தில் பாதுகாப்பான செல்போன் வைப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களை வைப்பறையில் ஒப்படைத்து விட்டு தரிசனத்திற்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு செல்போனுக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், செல்போனை ஒப்படைத்ததற்கான ரசீதும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
கோவில் வளாகத்தில் சில பக்தர்கள் செல்போனில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது மட்டுமின்றி, நீண்ட நேரம் செல்போனில் பேசுவதாலும் மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பது கோவிலின் ஆன்மீக சூழலை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.அம்மனை அமைதியான முறையில் தரிசனம் செய்யவும், கோவில் வளாகத்தில் ஆன்மீக சூழலை பேணவும் இந்த நடவடிக்கை உதவும் என தெரிவித்துள்ளனர்.



0 Comments