பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்..... சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் போராட்டம்.....



 சென்னை பட்டினம்பாக்கத்தில் ரூ.1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார். இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.ஆனால் இங்கு புதிய தலைமை செயலகம் கட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 19) பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். மீனவர்களின் வீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் அக்கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், ”தற்போதைய தலைமை செயலகம் நெருக்கடியில் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஏற்கனவே பல்வேறு ஆட்சியினுடைய காலகட்டத்திலும் இந்த தலைமை செயலகத்தை மாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கலைஞர் முதலமைச்சராக இருந்த போதுதான் சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டது. ஆனால் அது பின்னால் வந்த ஆட்சியாளர்களால் மருத்துவமனையாக மாற்றப்பட்டு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்படி இருப்பினும் இப்போது இருக்கக்கூடிய தலைமைச் செயலகம் வேறு இடத்தில் மாற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது.

ஆனால் இப்போது தமிழ்நாடு அரசாங்கம் தேர்வு செய்யப்பட்டிருக்கிற இடம் அதற்கு கொஞ்சமும் பொருத்தமற்றது என்பதை நான் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ஏற்கனவே இந்த பகுதி 2004 ஆம் ஆண்டு  கடுமையாக சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதி என்பது இன்றைய முதலமைச்சருக்கு தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை.

ஆனால் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் நிவாரண பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள், நிவாரணம் வழங்கி இருக்கிறார்கள், வீடு கட்டி கொடுத்திருக்கிறார்கள். ஆகவே சுனாமியால் பாதிக்கப்படுகிற ஒரு பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவது என்று எடுத்திருக்கிற முடிவு என்பது மிக மிக மோசமானது, எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நான் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

ஒருவேளை இனிமேல் சுனாமி வந்தால் தடுப்பதற்கான புதிய தொழில்நுட்பம் ஏதாவது இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அல்லது சுனாமி இனிமேல் வராது என்ற முடிவுக்கு தமிழ்நாடு அரசாங்கம் வந்துவிட்டதா என்கிற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.

ஆகவே  கடற்கரைக்கு அருகில் மீனவர்களுடைய வாழ்வாதாரத்தையும் குடியிருப்பையும் பாதிக்கப்படக்கூடிய வகையில் இப்படி யோசனையை சொன்ன அதிகாரிகள் யாராக இருந்தாலும் அது ஏற்கத்தக்கது அல்ல. “எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று சொல்வார்கள்.

யார் இந்த யோசனையை சொல்லி இருந்தாலும் இது நிராகரிக்கப்பட வேண்டிய ஆலோசனை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

அதே நேரத்தில் மற்ற பல தலைவர்கள் சொல்வதை போல நிர்வாக நகரம் என்கிற என்ற பெயரில் பல 100 கிலோமீட்டர்களுக்கு அந்த பக்கம் இந்த நிர்வாக நகரத்தை மாற்றுவது என்கிற யோசனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. சென்னை நகரத்துக்குள்ளேயே புதிய தலைமை செயலகத்தையும் புதிய சட்டப்பேரவையையும் நிச்சயமாக அமைப்பதற்கான பல்வேறு இடங்கள் என்பது சென்னை மாநகரத்துக்குள்ளேயே இருக்கிறது.

தமிழ்நாடு அரசுக்கு இப்போது சொந்தமாக இருக்கிற கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் ஏறத்தாழ 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஒருவேளை இவர்கள் நான்கு சட்டமன்றம் கட்டுவது என்றாலும் அங்கே கட்ட முடியும். ஒருவேளை பின்னாடி சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்துவது என்ற யோசனை ஏதாவது அரசுக்கு இருந்தால், அதைவிட சிறந்த இடம் அவங்களுக்கு வேற இருக்க முடியாது.

இப்போது அவர்கள் கண்டறிந்திருக்கிற இடம் என்பது மிக மிகச் சிறிய இடம், வெறும் 25 ஏக்கர் தான். அதே மாதிரி கோயம்பேடு பேருந்து நிலையம் இப்போது கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையமும் அதை சுற்றி இருக்கிற இடமே மிகப்பெரிய இடம், யாரையும் அப்புறப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இப்படி மாற்று யோசனைகளை ஆராய்வதற்கு பதிலாக, தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்கிற பெயரில் அவசர அவசரமாக அரசாணையை வெளியிட்டிருப்பது என்பது, யார் என்ன யோசனையை சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டோம், எவ்வளவு நியாயமான ஆலோசனையாக இருந்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்கிற அணுகுமுறையை தான் அது வெளிப்படுத்துகிறது.

இப்போது வெளியிடப்பட்டிருக்கிற அரசாணை 564 திரும்ப பெற வேண்டும். பட்டினப்பக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கப்படாது என்கிற அறிவிப்பை முதலமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.

இதுபோன்ற விஷயங்கள் என்பது ஏதோ அவர்களுடைய ஆட்சியினுடைய சாதனை பட்டியலில் வரக்கூடியது அல்ல. மாறாக காலம் காலத்திற்கும் அடுத்தடுத்து வரக்கூடிய எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தலைமை செயலகமும் சட்டமன்றமும் இங்கேதான் இருக்கும் என ஒரு பொதுவான இடத்தில், பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தை ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

புதிய தலைமை செயலகம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்களோ இல்லையோ… ஆனால் யார் வந்து இங்கு பணியை தொடங்கினாலும் நிச்சயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments