சத்தியமங்கலத்தில் திம்பம் மலை பாதை வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்,காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்,பயணிகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்ட ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலை பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று மாலை திம்பம் மலைப்பாதை மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவற்றின் மீது மோதி அதே வேகத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த ஓட்டுநர் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை கிரேன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திம்பம் மலைப்பாதை சாலையோரம் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
மக்கள் நேரம் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments