நாகப்பட்டினம் மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன்படி திருக்குவளை அருகே வடுவூர் நல்லமுத்துமாரியம்மன் கோவில் பின்புறத்தில் வெள்ளை நிற சாக்குகளில் ரேஷன் அரிசி நிரப்பிய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.இதனை கண்ட அப்பகுதியினர் அளித்த ரகசிய தகவலின் படி அங்கு விரைந்த திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் திலகா ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ரேசன் அரிசியை மர்ம நபர்கள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து சுமார் 50 வெள்ளை நிற சாக்குகளில் நிரப்பப்பட்டிருந்த ரேசன் அரிசியை கைப்பற்றி டிராக்டர் மூலமாக தமிழ்நாடு நுகர்பொருள் செயல்முறை வட்டக் கிடங்கிற்கு கொண்டு வந்து ஆய்வாளர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து குடிமை பொருள் குற்ற புலனாய்வு ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார் ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.நாகை அருகே சட்ட விரோதமாக ரேசன் அரிசியை மர்ம நபர்கள் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments