ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள திருவடிமிதியூர் கிராமத்தில், நள்ளிரவு நேரங்களில் மணல் மாஃபியாக்கள் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவடிமிதியூர் கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான பட்டா நிலங்கள் அதிகளவில் உள்ளன. மணற்பாங்கான இந்தப் பகுதிகளில் முன்னதாக நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் செழிப்பாக விளைவிக்கப்பட்டன. ஆனால், காலமாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால் தற்போது இந்தப் பட்டா நிலங்கள் பயிரிடப்படாமல் தரிசாகக் கிடக்கின்றன.
இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மணல் மாஃபியாக்கள், கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நிலங்களில் பெரும் பள்ளங்களைத் தோண்டி மணலைத் திருடிச் செல்கின்றனர்.
தனியார் பட்டா நிலங்களில் இவ்வளவு பெரிய அளவில் மணல் கொள்ளை அரங்கேறியும், வருவாய்த் துறையினரோ அல்லது காவல்துறையினரோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிகாரிகளுக்குத் தெரியாமல் இந்தத் திருட்டு நடப்பது சாத்தியமில்லை என்றும், இதில் மறைமுக ஒத்துழைப்பு இருக்குமோ என்ற ஐயமும் எழுந்துள்ளது.
தங்கள் வாழ்வாதாரமாக விளங்கிய விவசாய நிலங்கள் தற்போது பள்ளங்களாக மாற்றப்பட்டு வருவதைக் கண்டு நில உரிமையாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, திருவடிமிதியூர் பகுதியில் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபடும் கும்பலை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



0 Comments