பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா... பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது...

 


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்துசமய அறநிலையத்துறைக்கு 

சொந்தமான இக்கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தொடர்ந்து 12 மணி நேரம் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம்  தேதிகளில் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் ஒன்று கூடுவர் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக  கோவில் வளாகத்தில்  பந்தல் அமைப்பதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே நடைபெற்ற பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் மேனகா, பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், மகேந்திரன், மேலாளர் தமிழ்செல்வன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு கோடை வெயிலின் தாகம் தணிக்க இலவசமாக நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி கலந்து கொண்டு பக்தர்களுக்கு நீர்மோரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் மேனகா மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments