எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் நிகழ்வில் ஆர்வமுடன் கலந்துகொண்டு போட்டோ கார்னரில் படம் எடுத்துக் கொண்ட பெற்றோர்கள்


நாகப்பட்டினம் மாவட்டம்  திருக்குவளை அருகே உள்ள நாகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம், உலக சிட்டுக்குருவிகள் தினம் மற்றும் மாணவியின் பிறந்தநாளில் மரம் நடும் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. எண்ணும் எழுத்தும் விழா கொண்டாட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பி பரமேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார், விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரம்யா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திர குமார் ஆகியோர்  தலைமை வகித்தனர். இந்நிகழ்வில் எண்ணும் எழுத்தும் துணைக் கருவிகள் கண்காட்சி, மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் சிறப்பாக கண்டு களித்தனர். எண்ணும் எழுத்தும் திட்டம் பற்றி ஆசிரியர்கள் சங்கரவடிவேல் மற்றும் செல்வரத்தினம் ஆகியோர் பெற்றோர்களுக்கு விளக்கி கூறினர். அதனைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு தலைவி ரம்யா கூறும் போது, எண்ணும் எழுத்தும் முறையில் கொரோனா கால கற்றல் இடைவெளி முற்றிலமாக அகற்றப்பட்டு மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்கின்றனர் என தெரிவித்தார். எண்ணும் எழுத்தும் கொண்டாட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த போட்டோ கார்னரில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுடன் ஆர்வமாக படம் எடுத்துக் கொண்டதுடன் இவர்களுடன் வட்டார கல்வி அலுவலர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் போட்டோ கார்னரில் படம் எடுத்துக் கொண்டனர். மேலும் விழாவில் மாநில அளவிலான குறும்பட போட்டியில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர் கஸ்தூரிக்கு வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன், சிவக்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் சிட்டுக்குருவி கூடுகளை வழங்கினர். நிகழ்வின் இறுதியாக இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாணவியும் வட்டார கல்வி அலுவலரும் இணைந்து பள்ளி வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளை நட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்செல்வம், லோகநாதன், சீனிவாசன், அருள்ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments