வேதாரண்யத்தில் நாட்டுத் துப்பாக்கியால் தந்தையை மகன் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர் தான், நாகை மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன்காடு பகுதியை சோ்ந்த உப்பளத்தொழிலாளியான கருணாநிதி(45) யின் தந்தை பன்னீா்செல்வம் (65) விவசாயி ஆவார்.இவரது மகன் கருணாநிதிக்கும் அவரது மனைவி புனிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் புனிதா கணவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. புனிதா பிரிந்து சென்றதற்கு தந்தை பன்னீர்செல்வம் தான் காரணம் என கூறி கருணாநிதி தனது தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் இதுகுறித்து பன்னீர்செல்வத்திடம் நேற்று கருணாநிதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த கருணாநிதி தான் அனுமதியில்லாமல் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் தனது தந்தை என்றும் பாராமல் பன்னீர்செல்வத்தை நோக்கி சுட்டுள்ளார். அப்போது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய சிறிய அளவிலான ஈயக் குண்டு பன்னீர்செல்வம் மீது படாமல் அருகில் உள்ள தண்ணீர் டிரம்மில் பட்டது. இதனால் பன்னீர்செல்வம் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து பன்னீர்செல்வம் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் கருணாநிதியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது தந்தையை துப்பாக்கியால் சுட முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் வேம்பதேவன் காடு, புளியங்குளத்தில் கிடந்த துப்பாக்கியை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், மற்றும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த துப்பாக்கிக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா? கள்ளத்துப்பாக்கியா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான கருணாநிதி மீது பறவை, மான் வேட்டை நடத்தியதாக ஏற்கனவே வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தகராறில் தந்தையை வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டது வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



0 Comments