எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் ஊழல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 18, 2023

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் ஊழல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

 


முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது, நெடுஞ்சாலை துறையில் டெண்டர் பெறப்பட்ட விவகாரத்தில் சுமார் 4,500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.



இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரணை நடத்தும் படி 2018 ஆம் ஆண்டு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தாக்கல் செய்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்துவிட்டு மீண்டும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க அனுமதி அளித்து இருந்தது.



இதனை தொடர்ந்து மீண்டும் அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, இந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்குமாறு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரப்பட்டது. அதாவது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றமில்லை என 2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை. எனவே அவர்கள் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ். பாரதி வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கூடாது என்றும் 2018 ஆம் ஆண்டு லஞ்சஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தார்.



நெடுஞ்சாலை துறை டெண்டர் விவகாரத்தில் ஊழல் புகார் தொடர்பான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கபட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீது புதிய விசாரணை தொடங்குமா அல்லது ஏற்கனவே உள்ள ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி மீது மனு விசாரணை தொடங்குமா என்பது குறித்த முக்கிய உத்தரவுகள் இன்று பிறப்பிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment