• Breaking News

    இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை

     


    இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து 16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.




    திருச்சி மாவட்டம் மிளகுப்பாறையை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. கொரோனா காலத்தில் பள்ளி விடுமுறை காலம் என்பதால் இவர்கள் செல்போனில் பேசி வந்தனர். நாளடைவில் காதலாக மலர்ந்தது.


    இந்தநிலையில் சூர்யபிரகாஷ், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் திருச்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 13-9-2021 அன்று அந்த சிறுமியும் பஸ் மூலம் திருச்சி பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு காத்திருந்த சூர்யபிரகாஷ் சிறுமியை அழைத்துசென்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு ஒருவாரம் அங்கு ஒரு வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.



    இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து மூலனூர் போலீசார் சூர்யபிரகாசை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியையும் மீட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.


    போக்சோ குற்றத்துக்காக 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,500 அபராதம், திருமணம் செய்வதாக கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், குழந்தை திருமணம் செய்த குற்றத்துக்காக 1 ஆண்டு சிறை தண்டனை, அடைத்து வைத்திருந்த குற்றத்துக்கு 1 ஆண்டு சிறை தண்டனை ஆகியவற்றை ஏக காலத்தில் சூர்யபிரகாஷ் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார்.

    No comments