பசுமை வரி உயர்வை கண்டித்து நவம்பர் 9ம் தேதி 6.50 லட்சம் லாரிகள் இயங்காது - MAKKAL NERAM

Breaking

Friday, October 27, 2023

பசுமை வரி உயர்வை கண்டித்து நவம்பர் 9ம் தேதி 6.50 லட்சம் லாரிகள் இயங்காது

 


லாரிகளுக்கான  பசுமை வரி  கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும்,  அதனை திரும்ப பெறக் கோரியும் நவம்பர் 9ம் தேதியன்று தமிழ்நாட்டில் லாரிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் 6.50 லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரி உரிமையாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  இந்த நிலையில் தமிழ்நாட்டில் லாரிகளுக்கான  பசுமை வரி உள்ளிட்டவை  கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 


லாரிகளுக்கு பசுமை வரி 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும், காலாண்டு வரி 6 சக்கர லாரிகளுக்கு 3,596 ரூபாயிலிருந்து, 904 ரூபாய் உயர்த்தி 4,550 ரூபாயாகவும், 10 சக்கர லாரிகளுக்கு 4,959 ரூபாயிலிருந்து 2,041 ரூபாய் உயர்த்தி, 7, 059 ரூபாயாக ஆகவும், 12 சக்கர லாரிகளுக்கு 6, 373 ரூபாயிலிருந்து 3,327 ரூபாய் உயர்த்தி 9 ,170 ரூபாயாகவும், 14 சக்கர லாரிகளுக்கு 7,787 ரூபாயிலிருந்து 3,413 ரூபாய் உயர்த்தி 11,290 ஆகவும், 16 சக்கர லாரிகளுக்கு 4,200 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.



இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள லாரி உரிமையாளர்கள், இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நவம்பர் 9ம் தேதி ஒரு நாள், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது எனவும் தெரிவித்துள்ளனர்.


இந்த வேலைநிறுத்தத்தில் 6.50 லட்சம் லாரிகள் அன்று ஒருநாள் மட்டும் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் காய்கறிகள் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment