வாடகை காரில் 'போலீஸ்' ஸ்டிக்கர்..... சிக்கலில் அவிநாசி காவல்துறையினர்...... - MAKKAL NERAM

Breaking

Thursday, October 12, 2023

வாடகை காரில் 'போலீஸ்' ஸ்டிக்கர்..... சிக்கலில் அவிநாசி காவல்துறையினர்......

 


திருப்பூரில் அரசு வழங்கிய போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியதை அடுத்து, போலி வாகனம் ஒன்றில் போலீஸார் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் உத்தரவிட்டு உள்ளார்.


திருப்பூர் மாவட்டம் அவிநாசி பைபாஸ் சர்வீஸ் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்பர் பிளேட் இல்லாத வாடகை வாகனத்தில், போலீஸார் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதாக புகார் எழுந்தது.


மேலும் இந்த வாகனத்தில் வரும் போலீஸார், உரிய ஆவணங்களைத் தராமல் வாகன ஓட்டிகளிடமிருந்து பணத்தை வசூல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.



இதையடுத்து போலீஸார் நடத்திய முதல் கட்ட ஆய்வில், அவிநாசி காவல் நிலையத்தில பயன்பாட்டில் இருந்து வந்த ரோந்து வாகனம், ஊத்துக்குளி அருகே விபத்தில் சிக்கி சேதம் அடைந்ததாக தெரியவந்தது. இந்த தகவலை மேலதிகாரிகளிடம் தெரிவிக்காமல், தனியார் பழுது நீக்கும் நிறுவனத்தில் வாகனத்தை கொடுத்து சரி செய்ய போலீஸார் முயன்றுள்ளனர்.


இதனிடையே போலீஸார் சிலர், தனியார் வாடகை வாகனம் ஒன்றில், ’போலீஸ்’ ஸ்டிக்கரை ஒட்டி போலீஸ் வாகனம் போல் மாற்றங்கள் செய்து, திருப்பூர் அவிநாசி பைபாஸ் சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.



இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் திருப்பூர் போலீஸார் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment