தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் மண்ணுக்குள் புதைந்தது. இதற்குள் பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மிக்ஜாம் புயல் புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை (டிச.5) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிரப் புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே 40 அடிக்கு திடீர் என பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகே இருந்த பெட்ரோல் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்தது. 40 அடி பள்ளத்திற்குள் சிக்கிய 5 வடமாநில தொழிலாளர்களில் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டடம் கனமழை காரணமாக மண்ணிற்குள் இறங்கியது.
இந்த கட்டடத்திற்குள் பத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இரண்டு பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் கிண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment