கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை நீக்கம் - முதலமைச்சர் சித்தராமையா அதிரடி - MAKKAL NERAM

Breaking

Saturday, December 23, 2023

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை நீக்கம் - முதலமைச்சர் சித்தராமையா அதிரடி

 


கர்நாடாக மாநிலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உடுப்பி அரசு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தார். இதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் தடை செல்லும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 18ல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். ஒரு நீதிபதி, உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் எனவும் மற்றொரு நீதிபதி செல்லாது எனவும் தீர்ப்பளித்தனர்.



ஹிஜாப் விவகாரம்

ஹிஜாப் விவகாரம்

இதனிடையே கர்நாடகத்தில் இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் சார்பில் சித்தராமையா முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள பதிவில், "ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது ஒருவரின் சொந்த தனி உரிமை. ஹிஜாப் தடையை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளேன். அனைவருக்குமான வளர்ச்சி என பிரதமர் மோடி கூறுவது ஏமாற்று. வேலை. உடை, சாதி அடிப்படையில் மக்களையும் சமூகத்தையும் பாஜக பிளவுபடுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்தராமையா இது தொடர்பாக கூறுகையில், "எந்த உடை அணிவது, என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதை நான் ஏன் தடுக்க வேண்டும்? உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment